திங்கள், 30 நவம்பர், 2009

மேலப்பாளையத்தில் நடைபெற்ற தியாகத்திருநாள் திடல் தொழுகையில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு!


photo2photo1photo3
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாளையொட்டி மேலப்பாளையம் மாநகராட்சி மண்டல அலுவலகம் அருகிலுள்ள தவ்ஹீத் ஜமாஅத் ஈத்கா திடலில் பெருநாள்தொழுகை நடைபெற்றது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மேலாண்மைக் குழுத் தலைவர் மவ்லவி எம். ஷம்சுல்லுஹா ரஹ்மானி பெருநாள் தொழுகையை நடத்தி வைத்து, பெருநாள் குத்பா எனப்படும் சொற்பொழிவு நிகழ்த்தினார்.
அவர் தனது உரையில், “சிலை வழிபாடு கூடாது என்று உலகிற்கு உணர்த்துவதற்காக அனுப்பப்பட்ட இப்ராஹீம் நபியின் தியாகத்தை நினைவு கூரும் வகையில் தான் இந்தப் பெருநாள் கொண்டாடப்படுகின்றது.
நமது நாட்டின் பொருளாதாரத்தின் பெரும் பகுதி சிலைகளுக்கும் நினைவுச் சின்னங்கள் அமைப்பதற்கும் பாழ்படுத்தப்படுகின்றன. உத்தரபிரதேச மாநிலத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை சுமார் 6 கோடி ஆகும்.
இந்த அளவுக்குப் பின்தங்கியிருக்கும் ஒரு மாநிலத்தில் சிலைகளுக்காகவும் நினைவுச் சின்னங்களுக்காகவும் பத்தாயிரம் கோடி ரூபாயைச் செலவு செய்துள்ளது அம்மாநில அரசு. இதற்காக உச்சநீதிமன்றத்தின் கண்டனத்திற்கும் உள்ளாகியுள்ளது. இஸ்லாமிய சட்டத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும் சவூதி அரேபியா போன்ற நாடுகளில் சிலை வழிபாடு கிடையாது. இதனால் மக்கள் வரிப்பணம் பாழாகாமல் பாதுகாக்கப்படுகின்றது. நாட்டிலும் செல்வம் செழிக்கின்றது” என்று கூறினார்.
இந்த சிறப்புத் தொழுகையில் சுமார் பத்தாயிரம் ஆண்களும், மூவாயிரம் பெண்களும் கலந்து கொண்டு தொழுகை மற்றும் சிறப்புப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்டத் தலைவர் யூசுப் அலீ, மாவட்டச் செயலாளர் சாதிக்,மஸ்ஜிதுர்ரஹ்மான் பொருளாளர் ஸய்யது இப்ராஹீம், தவ்ஹீத் ஜமாஅத் நகரத் தலைவர்எஸ்.பி. மைதீன்,செயலாளர் ரோஷன், பொருளாளர் நிவாஸ்உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
தொழுகைக்கான ஏற்பாடுகளை மஸ்ஜிதுர்ரஹ்மான் நிர்வாகக் கமிட்டியினர் செய்திருந்தனர்.
தொழுகை முடிந்த பின் மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளிவாசலில் எழுபது மாடுகள் மற்றும் ஆடுகளைக் குர்பானி கொடுத்து, சுமார் 7000 ஏழைகளுக்கு இறைச்சி வினியோகம் செய்யப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக