சனி, 7 நவம்பர், 2009

ஹஜ் செய்வர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள்! ஹஜ் செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டி ஹஜ் சட்டங்கள்



muslim-002-300x300
ஹஜ் என்பது இஸ்லாமியக் கடமைகளில் ஐந்தாவது கடமையாகும். இந்தக் கடமையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரி பத்தாம் ஆண்டு நிறைவேற்றுகிறார்கள்.


தொழுகை, நோன்பு, ஜகாத் போன்ற வணக்கங்களின் செயல்முறையை இந்தப் பத்தாண்டுகளில் நபி (ஸல்) அவர்களிடமிருந்து தெரிந்து கொண்ட நபித்தோழர்களுக்கு, ஹஜ் என்ற வணக்கத்தின் செயல்முறை மட்டும் நிலுவையில் இருந்தது. அதை நிறைவேற்றும் முகமாக நபி (ஸல்) அவர்கள் பயணத்தைத் துவக்கியதும் நபித்தோழர்கள் அன்னாரின் ஹஜ் வணக்கத்தை மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கலானார்கள்.
“உங்களுடைய ஹஜ் மற்றும் உம்ராவைத் தெரிந்து கொள்ளுங்கள்! ஏனெனில் இந்த ஹஜ்ஜுக்குப் பிறகு (வரும் ஆண்டு) நான் ஹஜ் செய்வேனா என்று எனக்குத் தெரியாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். நூல்: முஸ்லிம் 2286


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இந்தப் பிரியாவிடை வார்த்தைகள் நபித்தோழர்களை இன்னும் கூர்மையாகக் கவனிக்கச் செய்தது. இந்த இறுதி ஹஜ்ஜின் போது நபி (ஸல்) அவர்கள், பிரியப் போகும் தந்தை, தன் பிள்ளையிடத்தில் எப்படி நடப்பாரோ அது போன்று நபித்தோழர்களிடம் நடந்து கொண்டார்கள்.

ஹஜ் என்ற வணக்கம் பெரும் மக்கள் வெள்ளத்தில் நடைபெறும் வணக்கமாகும்.

இந்த மக்கள் நெருக்கடியான கட்டத்தில், ஹஜ்ஜின் கிரியைகளை நிறைவேற்றுவதில் மார்க்கம் ஒரு கடுமையான நிலையைக் கையாண்டால் அது மிகவும் சிரமத்தையும், பின்பற்ற முடியாத சூழ்நிலையையும் ஏற்படுத்தி விடும்.
எனவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த ஹஜ் வணக்கத்தில் பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளார்கள்.
ஹஜ்ஜுக்குச் செல்வோர், மார்க்கம் வழங்கும் இந்தச் சலுகைகளைத் தெரிந்து கொள்வது மிகவும் பயனுள்ளதாக அமையும் என்ற அடிப்படையில் இதை உங்கள் முன் வைக்கிறோம்.
சலுகை 1
தமத்துஃ ஹஜ்


ஹஜ் என்ற வணக்கத்தை மூன்று முறைகளில் செய்யலாம். தமத்துஃ, கிரான், இஃப்ராத் ஆகியவையே அந்த மூன்று முறைகள். இதில் தமத்துஃ என்ற முறையைச் செய்யும்படி நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் தம்மோடு குர்பானிப் பிராணியான ஒட்டகத்துடன் ஹஜ்ஜுக்கு வந்த போது நான் நபி (ஸல்) அவர்களோடு இருந்தேன். அப்போது மக்கள் அனைவரும் ஹஜ்ஜுக்காகவே இஹ்ராம் அணிந்திருந்தனர்.

நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களை நோக்கி, “நீங்கள் தவாஃபையும் ஸஃபா மர்வாவிற்கு மத்தியில் ஓடுவதையும் நிறைவேற்றி விட்டு, முடியைக் குறைத்து இஹ்ராமிலிருந்து விடுபட்டு (மக்காவில்) தங்கிக் கொள்ளுங்கள். பிறை எட்டு அன்று ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்து கொள்ளுங்கள். நீங்கள் இஹ்ராம் அணிந்து இதற்கு முன்னால் செய்ததை தமத்துஃ (உம்ரா)ஆக ஆக்கிக் கொள்ளுங்கள்” என்றார்கள்.
அதற்குத் தோழர்கள், “நாங்கள் ஹஜ்ஜின் பெயரில் இஹ்ராம் அணிந்து வந்தோம். அதை எவ்வாறு தமத்துஃ ஆக ஆக்குவது?” என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான் கட்டளையிட்டதை நீங்கள் செய்யுங்கள். நான் என்னுடன் குர்பானிப் பிராணியைக் கொண்டு வரவில்லையெனில் உங்களுக்கு நான் கட்டளையிட்டதைப் போன்று நிச்சயமாக நானும் செய்திருப்பேன்.
குர்பானிப் பிராணியைக் கொண்டு வந்தால் அதை அந்த இடத்தில் சேர்க்கும் வரை (பலியிடுகின்ற வரை) இஹ்ராமைக் களைவது எனக்குக் கூடாது” என்றார்கள். உடனே தோழர்கள் நபி (ஸல்) அவர்களின் கட்டளைப்படி செயலாற்றினார்கள்.


அறிவிப்பவர்:  ஜாபிர் (ரலி)

நூல்: புகாரி 1568

தமத்துஃ முறையில் ஹஜ் செய்பவர், முதலில் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்து, உம்ராவை முடித்து விட்டு, இஹ்ராமைக் களைந்து விட வேண்டும். அதன் மீண்டும் ஒருமுறை துல்ஹஜ் பிறை 8ல் இஹ்ராம் அணிந்து ஹஜ்ஜை முடிக்க வேண்டும். இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் இவருக்கு, தாம்பத்யம் உட்பட எல்லாமே அனுமதிக்கப்பட்டதாகும். இப்படி ஒரு வசதி மற்ற இரு முறைகளான கிரான் மற்றும் இஃப்ராத் ஆகிய முறைகளில் இல்லை.
ஒரு காரியத்தை விட்டும் மனிதன் தடுக்கப்படும் போது அதில் அதிக நாட்டம் ஏற்படுவது மனித இயல்பு. தமது மனைவியுடன் ஹஜ்ஜுக்குச் செல்லும் ஒருவர் இஹ்ராம் அணிந்ததும் மனைவியை அணைத்தல், முத்தமிடுதல், இல்லறத்தில் ஈடுபடுதல் ஆகிய காரியங்கள் தடையாகி விடுகின்றன. மனைவியுடன் செல்பவருக்கு இது போன்ற ஒரு நாட்டம் ஏற்பட்டு ஹஜ் என்ற வணக்கத்தைப் பாழ்படுத்தி விடக் கூடாது என்பதற்காக மார்க்கம் தமத்துஃ என்ற எளிய முறையை வலியுறுத்துகின்றது.
சலுகை 2

பிரசவத் தீட்டு

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் துல்கஃதா 25 அல்லது 26ல் புறப்பட்டார்கள்.  அவர்கள் (தம்முடன்) பலிப் பிராணிகளைக் கொண்டு வந்தார்கள்.  நாங்களும் அவர்களுடன் புறப்பட்டோம்.  எங்களுடன் பெண்களும், குழந்தைகளும் இருந்தனர்.
நாங்கள் (இஹ்ராம் கட்டும் எல்லையான) துல்ஹுலைஃபாவை அடைந்த போது (அபூபக்ர் (ரலி) அவர்களின் மனைவியான) அஸ்மா பின்த் உமைஸ் அவர்கள், முஹம்மது பின் அபூபக்ர் என்ற குழந்தையைப் பெற்றார்கள்.
“நான் என்ன செய்ய வேண்டும்?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அஸ்மா பின்த் உமைஸ்) கேட்டனுப்பினார்கள்.  “நீ குளித்து விட்டு, இரத்தத்தை உறிஞ்சுகின்ற துணியை இடுப்பில் கட்டிக் கொண்டு இஹ்ராம் கட்டிக் கொள்” என்று நபி (ஸல்) அவர்கள் அவருக்குப் பதிலளித்தார்கள்.
நூல்: முஸ்லிம் 2137
ஹஜ்ஜுக்குச் செல்லும் பெண்களுக்கு பிரசவம், பிரசவத் தீட்டு போன்றவை ஒரு தடையல்ல என்ற சலுகையை மார்க்கம் வழங்குகின்றது.


சலுகை 3

தலைமுடியைக் களைதல்



இஹ்ராம் அணிந்தவர் குர்பானி கொடுத்து முடிகின்ற வரை தலைமுடியைக் களையக் கூடாது.  ஆனால் தலையில் பேன் பற்றியவர் என்ன செய்ய வேண்டும்? அதற்கு இந்த வசனம் ஒரு சலுகையை அளிக்கிறது.

பலிப்பிராணி அதற்குரிய இடத்தை அடைவதற்கு முன் உங்கள் தலைகளை மழிக்காதீர்கள்! உங்களில் நோயாளியாகவோ, தலையில் ஏதேனும் தொந்தரவோ இருப்பவர் (தலையை முன்னரே மழிக்கலாம்.) அதற்குப் பரிகாரமாக நோன்பு அல்லது தர்மம் அல்லது பலியிடுதல் உண்டு.

அல்குர்ஆன் 2:196
பின்வரும் ஹதீஸ் இது தொடர்பாக முழு விளக்கத்தைத் தருகிறது.
ஹுதைபிய்யா சமயத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்து “உன் தலையில் உள்ள பேன்கள் உனக்குத் தொல்லை தருகின்றனவா?” என்று கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன். “அப்படி யானால் தலையை மழித்து விட்டு ஒரு ஆட்டை அறுப்பீராக! அல்லது மூன்று நாட்கள் நோன்பு நோற்பீராக! அல்லது மூன்று ஸாவு’ பேரிச்சம்பழங்களை ஆறு ஏழைகளுக்குப் பங்கிட்டுக் கொடுப்பீராக!” என்றார்கள்.


அறிவிப்பவர்: கஃப் பின் உஜ்ரா (ரலி)

நூல்: புகாரி 1814, 1815, 1816, 1818, 4159, 4190, 4191, 4517, 5703



சலுகை 4

பலிப் பிராணி



தமத்துஃ ஹஜ் செய்பவர் கண்டிப்பாகப் பலிப்பொருள் கொடுத்தாக வேண்டும். ஒருவரிடம் பலிப் பொருள் கொடுக்கச் சக்தியில்லை என்றால் இப்படிப் பட்டவர்களும் தமத்துஃ ஹஜ் செய்யலாம்.

ஆனால் அவர் மக்காவில் இருக்கும் போது 3 நோன்புகளும், ஊருக்குத் திரும்பியதும் 7 நோன்புகளும் ஆக, பத்து நோன்புகள் நோற்க வேண்டும். இதைப் பின்வரும் வசனத்திலிருந்து அறியலாம்.

உங்களில் அச்சமற்ற நிலையை அடைந்து ஹஜ்ஜையும், உம்ராவையும் தமத்துவ் முறையில் செய்பவர், இயன்ற பலிப்பிராணியை (பலியிட வேண்டும்) அது கிடைக்காதவர் ஹஜ்ஜின் போது மூன்று நோன்புகளும் (ஊர்) திரும்பிய பின் ஏழு நோன்புகளும் நோற்க வேண்டும். இதனால் பத்து முழுமை பெறும். இ(ச் சலுகையான)து மஸ்ஜிதுல் ஹராமில் யாருடைய குடும்பம் வசிக்க வில்லையோ அவருக்குரியது.
அல்குர்ஆன் 2:196


சலுகை 5

இஹ்ராமில் பெண்களுக்கு சலுகைகள்



இஹ்ராம் அணிவதில் பெண்களுக்குச் சலுகைகள் உண்டு. தையல் இல்லாத ஆடை அணிய வேண்டும் என்ற நிபந்தனை பெண்களுக்கு இல்லை. மேலும் பெண்கள் இஹ்ராமின் போது முகத்தை மூடக் கூடாது; கையுறைகள் அணியக் கூடாது என்று கூறி பெண்களுக்குப் பெரும் சவுகரியத்தை அளித்திருக்கின்றது.

“இஹ்ராம் கட்டிய பெண் தனது முகத்தை மறைக்க வேண்டாம். கையுறைகளையும் அவள் பயன்படுத்த வேண்டாம்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.



அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 1838



சலுகை 6

ஹஜ்ருல் அஸ்வதை முத்தமிடுதல்

ஒவ்வொரு தவாஃபின் முடிவிலும் ஹஜ்ருல் அஸ்வதை முத்தமிடுவது நபிவழியாகும். எனினும் சிரமமான கட்டத்தில் ஹஜ்ருல் அஸ்வதை நெருங்க முடியாமல் போனால் அதை நோக்கி சைகையால் முத்தமிட்டும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீது அமர்ந்து தவாஃப் செய்தார்கள். (ஹஜருல் அஸ்வத் அமைந்த) மூலையை அடைந்தவுடன் அதை நோக்கி சைகை செய்தார்கள். தக்பீரும் கூறினார்கள்.


அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 1612, 1613, 1632, 5293

பிற்காலத்தில் வருகின்ற மக்கள் நெரிசலில் ஹஜ்ருல் அஸ்வதை நேரடியாக முத்தமிடுவது பெரும் சிரமம் என்பதால் சைகையால் முத்தமிடும் வழிமுறையையும் அன்றே நபி (ஸல்) அவர்கள் செய்து காட்டிச் சென்றுள்ளார்கள்.
சலுகை 7

மாதவிடாய் ஏற்படும் போது மார்க்கம் தரும் சலுகை

இஹ்ராம் கட்டிய பெண், தவாஃபுக்கு முன் மாதவிலக்காகி விட்டால் என்ன செய்வது? இது போன்ற நிலை அன்னை ஆயிஷா (ரலி) அவர்களுக்கு ஏற்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கொடுத்த தீர்வு:
“நீ ஹாஜிகள் செய்யும் அனைத்தையும் செய்! தூய்மையாகும் வரை கஃபாவில் தவாஃப் செய்யாதே!” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.


அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 305, 1650

நான் மக்காவுக்குச் சென்றதும் மாதவிலக்கானேன். எனவே, நான் தவாஃப் செய்யவுமில்லை; ஸஃபா, மர்வாவுக்கிடையே ஓடவும் இல்லை.


அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 1556

இந்த ஹதீஸ்களின் படி ஒரு பெண் மாதவிலக்காகி விட்டால் தவாஃப், ஸஃபா மர்வாவில் ஸஃயீ செய்தல் ஆகிய இரண்டைத் தவிர ஹஜ்ஜின் அனைத்துக் காரியங்களையும் செய்ய வேண்டும்.
சலுகை 8

அரபாவை வந்தடைவதில் ஓர் அரிய சலுகை
ஹஜ்ஜின் போது பிறை 9ல் சூரிய உதயத்திற்குப் பிறகு புறப்பட்டு அரஃபாவுக்கு வர வேண்டும். அங்கு சூரியன் மறையும் வரை தங்கியிருந்து விட்டு சூரியன் மறைந்த பின் 10ஆம் நாள் இரவில் முஸ்தலிபாவுக்குச் செல்ல வேண்டும்.
ஹஜ்ஜின் மிக முக்கியமான கிரியை அரஃபாவில் தங்குவது தான். சிறிது நேரமேனும் அரஃபாவில் ஒன்பதாம் நாள் தங்காவிட்டால் ஹஜ் கூடாது.
“ஹஜ் என்பதே அரஃபா(வில் தங்குவது) தான். பத்தாம் இரவில் பஜ்ருக்கு முன் ஒருவர் (அரஃபாவுக்கு) வந்து விட்டால் அவர் ஹஜ்ஜை அடைந்து கொள்வார்” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.


அறிவிப்பாளர்: அப்துர்ரஹ்மான் பின் யஃமுர் (ரலி)

நூல்கள்: நஸயீ 2966, 2994 திர்மிதீ 814

ஒன்பதாம் நாள் நண்பகலுக்குள் அரஃபாவுக்கு வந்து விடுவது நபிவழி என்றாலும், மறு நாள் பஜ்ருக்கு முன்பாக வந்து விட்டாலும் ஹஜ் நிறைவேறி விடும் என்பதை இந்த ஹதீஸிலிருந்து அறியலாம்.


சலுகை 9

அரபா முழுவதும் தங்கலாம்

அரபா பெருவெளியில் நபி (ஸல்) அவர்கள் நின்ற இடத்தில் நிற்க வேண்டும்; மினாவில் அவர்கள் அறுத்துப் பலியிட்ட இடத்தில் அறுத்துப் பலியிட வேண்டும். ஆனால் மக்கள் வெள்ளத்தில் இது சாத்தியமில்லை என்பதால் நபி (ஸல்) அவர்கள் அரபாவில் எங்கும் நிற்கலாம்; மினாவில் எங்கும் அறுத்துப் பலியிடலாம் என்று சலுகை வழங்கியுள்ளார்கள்.
“நான் இந்த இடத்தில் நின்றேன். (இங்கு தான் எல்லோரும் நிற்க வேண்டும் என்று கருதி விடக் கூடாது) அரஃபா முழுவதுமே (தங்கி) நிற்கும் இடமாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
“நான் இந்த இடத்தில் அறுத்திருக்கின்றேன்.  இந்த (இடத்தில் தான் அறுக்க வேண்டும் என்றில்லை) மினா முழுவதுமே அறுக்குமிடம் தான்” என்று சொன்னார்கள்.


அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் 2138



சலுகை 10

மினாவுக்குப் புறப்படுவதில் பலவீனர்களுக்குச் சலுகை

பஜ்ரு தொழுத பின்பே முஸ்தலிஃபாவிலிருந்து மினாவுக்குப் புறப்பட வேண்டும் என்றாலும் பலவீனர்கள், பெண்கள் ஆகியோர் இரவிலேயே மினாவுக்குச் சென்று விடலாம்.
ஸவ்தா (ரலி) அவர்கள் பருமனாகவும் விரைந்து நடக்க முடியாதவர்களாகவும் இருந்தனர். அதனால் இரவிலேயே முஸ்தலிஃபாவிலிருந்து புறப்பட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள்.


அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 1681, 1680

தன் குடும்பத்தின் பலவீனருக்கு முஸ்தலிஃபாவிலிருந்து இரவே புறப்பட அனுமதி வழங்கப்பட்டது. அவர்களில் நானும் ஒருவனாக இருந்தேன்.


அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 1678, 1677, 1856



சலுகை 11

சூரிய உதயத்திற்கு முன் பெண்கள் கல்லெறிய சலுகை

பத்தாம் நாள் சூரிய உதயத்திற்குப் பிறகு தான் ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறிய வேண்டும். இருப்பினும் பெண்கள் சூரிய உதயத்திற்கு முந்தியே கல்லெறியலாம்.
அஸ்மா (ரலி) அவர்கள் முஸ்தலிஃபாவில் இரவில் தங்கினார்கள். அப்போது தொழலானார்கள். சிறிது நேரம் தொழுததும், “மகனே! சந்திரன் மறைந்து விட்டதா? என்று கேட்டார்கள். நான் இல்லை’ என்றேன். மீண்டும் சிறிது நேரம் தொழுது விட்டு “மகனே சந்திரன் மறைந்து விட்டதா? என்றார்கள். நான் ஆம்’ என்றேன். அப்போது அவர்கள், “புறப்படுங்கள்” என்றார்கள். நாங்கள் புறப்பட்டோம். ஜம்ரதுல் அகபாவை அடைந்தவுடன் கல்லெறிந்தார்கள். பிறகு திரும்பிச் சென்று தமது தங்குமிடத்தில் சுபுஹ் தொழுதார்கள். “இருட்டிலேயே நீங்கள் கல்லெறிந்து விட்டீர்களே” என்று கேட்டேன். அதற்கவர்கள் “நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் பெண்களுக்கு (இவ்வாறு செய்ய) அனுமதி வழங்கியுள்ளனர்” என விடையளித்தார்கள்.


அறிவிப்பவர்: அப்துல்லாஹ்

நூல்: புகாரி 1679

சலுகை 12

வணக்க வரிசையில் மாற்றம்

பத்தாம் நாளில் கல்லெறிதல், பலியிடுதல், தலைமுடியை மழித்தல், தவாஃப் செய்தல் ஆகிய காரியங்களை வரிசைப்படி நபி (ஸல்) அவர்கள் செய்துள்ளார்கள். ஆனால் நபித்தோழர்கள் இதற்கு மாற்றமாகச் செய்த போது நபி (ஸல்) அவர்கள் மிகத் தாராளமாகவே நடந்து கொண்டார்கள். இத்தனை பெரிய மக்கள் வெள்ளத்தில் இந்த மாற்றங்கள் நிகழும் என்பதால் இந்தச் சலுகைகளை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வழங்கியுள்ளார்கள்.


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பலியிட்டு விட்டு, தலை முடியை மழித்துக் கொண்டார்கள்.  மக்கள் பலியிடும் வரை பலியிடும் தினத்தில் மினாவிலேயே இருந்தார்கள்.  அன்றைய தினம் ஏதாவது ஒரு செயலைச் செய்வதற்கு முன்பாக செய்து விட்ட மற்றொரு செயலைப் பற்றி அவர்கள் வினவிய போதெல்லாம் அவர்கள், “குற்றமில்லை, குற்றமில்லை” என்று பதிலளித்துக் கொண்டிருந்தார்கள்.

அவ்வாறிருக்கையில் அவர்களிடம் ஒருவர் வந்து, “நான் பலியிடுவதற்கு முன்பு தலையை மழித்து விட்டேனே?” என்று கேட்டார்.  “குற்றமில்லை” என்று பதிலளித்தார்கள்.

வேறொருவர் வந்து “நான் கல்லெறிவதற்கு முன்பு தவாஃப் செய்து விட்டேன்” என்று வினவினார்.  “குற்றமில்லை” என்று பதிலளித்தார்கள்.
“நான் பலியிடுவதற்கு முன்பு தவாஃப் செய்து விட்டேன்”’ என்று வினவினார்.  “நீ இப்போது பலியிடு, குற்றமில்லை” என்று கூறினார்கள்.
பிறகு வேறொருவர் வந்து, “கல்லெறிவதற்கு முன்னர் பலியிட்டு விட்டேன்” என்று வினவினார்.  “(இப்போது) கல்லெறி, குற்றமில்லை” என்று பதிலளித்தார்கள்.


அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் 2138

சலுகை 13

தொழுகையில் சலுகை



ஹஜ்ஜின் போது நான்கு ரக்அத் தொழுகைகளை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும். லுஹர், அஸர் ஆகிய இரண்டையும், மக்ரிப், இஷா ஆகிய இரண்டையும் ஜம்வு செய்து (சேர்த்து) தொழ வேண்டும்.

மினாவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்கு இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வைத்தார்கள்.
அறிவிப்பவர்: ஹாரிஸா பின் வஹ்பு (ரலி)

நூல்: புகாரி 1082, 1083, 1655, 1656
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அரஃபா நாளில் குத்பா – உரை – நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) உங்களின் இரத்தங்களும் உங்கள் செல்வங்களும் உங்களுக்குப் புனிதமானவையாகும் என்று தொடங்கும் நீண்ட உரையை நிகழ்த்தினார்கள்.
பிறகு பாங்கு சொல்லி பின்னர் இகாமத் கூறி லுஹர் தொழுதார்கள். பிறகு மீண்டும் இகாமத் கூறி அஸர் தொழுதார்கள்.


அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் 2137

சலுகை 14

ஹஜ்ஜில் வியாபாரம்



ஹஜ்ஜுக்குச் செல்வோர் வியாபாரம் எதுவும் செய்யக் கூடாது என்று தவறாக விளங்கி வைத்திருக்கின்றனர்.

ஆனால் அல்லாஹ் தனது திருமறையில் ஹஜ்ஜின் போது வியாபாரம் செய்யலாம் என்ற சலுகையை வழங்கியுள்ளான்.

(ஹஜ்ஜின் போது வியாபாரத்தின் மூலம்) உங்கள் இறைவனின் அருளைத் தேடுவது உங்களுக்குக் குற்றமில்லை.
அல்குர்ஆன் 2:198
ஹஜ் என்ற மாபெரும் வணக்கத்தில் இது போன்ற சலுகைகளை வழங்கி, எல்லா வகையிலும் எளிமையான மார்க்கமாகத் திகழ்கிறது.
-அபூஜாஸிர்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக