ஞாயிறு, 27 செப்டம்பர், 2009
மேலப்பாளையத்தில் நடைபெற்ற நோன்பு பெருநாள் திடல் தொழுகை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நோன்புப் பெருநாளையொட்டி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டல அலுவலகம் அருகிலுள்ள தவ்ஹீத் ஜமாஅத் ஈத்கா திடலில் பெருநாள் தொழுகை நடைபெற்றது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மேலாண்மைக் குழுத் தலைவரும் மஸ்ஜிதுர்ரஹ்மான் நிர்வாகக் கமிட்டியின் தலைவருமான மவ்லவி எம். ஷம்சுல்லுஹா ரஹ்மானி பெருநாள் தொழுகையை நடத்தி வைத்து, பெருநாள் குத்பா எனப்படும் சொற்பொழிவு நிகழ்த்தினார்.
அவர் தனது உரையில் குறிப்பிட்டதாவது:
இஸ்லாமிய மார்க்கம் மனித நேயத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். இன்று உலகில் மக்களின் வரிப் பணத்தில் ஆட்சியாளர்கள் தங்களுக்குத் தாங்களே சிலை வைத்துக் கொள்கின்றனர். மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை மறந்து விடுகின்றனர்.
ஆனால் இஸ்லாமிய மார்க்கத்தின் எந்தவொரு செயல்பாட்டிலும், வணக்கத்திலும் மக்கள் நலனே முன்னிறுத்தப்பட்டுள்ளதைப் பார்க்க முடியும். இந்த மார்க்கத்தின் இரண்டு முக்கிய பண்டிகைகளான நோன்புப் பெருநாள், ஹஜ் பெருநாள் ஆகிய இரண்டுமே ஏழைகளுக்கு வழங்க வேண்டிய தர்மத்தை அடிப்படையாகக் கொண்டவை.
ஹஜ் பெருநாளில் இறைவனுக்காக அறுக்கப்படும் ஆடு, மாடுகளின் இறைச்சியை ஏழைகளுக்கு உணவாக வழங்க வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிட்டுள்ளது. அதே போன்று நோன்புப் பெருநாள் அன்றும் ஃபித்ரா எனும் தர்மத்தைக் கடமையாக்கி அதை ஏழைகளுக்கு வழங்க வேண்டும் என்று இஸ்லாம் கூறுகின்றது.
அந்த அடிப்படையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், தமிழகமெங்கும் சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ஃபித்ரா எனும் தர்மத்தை மக்களிடம் வசூலித்து அதை ஏழை, எளிய மக்களுக்கு உணவாக இந்தப் பெருநாளில் வழங்குகின்றது.
மேலப்பாளையத்தில் மட்டும் சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அரிசி, பருப்பு, நெய், சமையல் எண்ணெய், தேங்காய் உள்ளிட்ட பொருட்களை ஏழைகளுக்கு வழங்கியுள்ளோம். 2700 குடும்பங்கள் இதனால் பயனடைந்துள்ளன.
இது போன்று கல்வி உதவி, மருத்துவ உதவி, இரத்த தானம் உள்ளிட்ட பல்வேறு சமூக சேவைகளைச் செய்து வருகிறோம். இவை அனைத்திற்கும் அடிப்படையாக அமைந்துள்ளது இஸ்லாம் கூறும் மனித நேயம் தான். அந்த மனித நேயம் உலகெங்கும் தழைக்க வேண்டும் என்று இந்த நாளில் நாம் சபதமெடுக்க வேண்டும்
இவ்வாறு ஷம்சுல்லுஹா தனது உரையில் குறிப்பிட்டார்.
இந்த சிறப்புத் தொழுகையில் மூவாயிரம் பெண்கள் உட்பட சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தொழுகை மற்றும் சிறப்புப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
மஸ்ஜிதுர்ரஹ்மான் நிர்வாகக் கமிட்டி செயலாளர் எம்.எஸ். சுலைமான், பொருளாளர் ஸய்யது இப்ராஹீம், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்டத் தலைவர் யூசுப் அலீ, மாவட்டச் செயலாளர் சாதிக், தவ்ஹீத் ஜமாஅத் நகரத் தலைவர் எஸ்.பி. மைதீன், செயலாளர் ரோஷன், பொருளாளர் நிவாஸ் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
நெல்லை மாவட்டத்திலேயே மிக அதிகமான ஆண்களும் பெண்களும் ஒரே இடத்தில் கூட்டாகத் தொழுகையில் கலந்து கொள்வது இந்தத் திடலில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நோன்புப் பெருநாள் தர்மமாக 2700 ஏழைக் குடும்பங்களுக்கு ரூபாய் மூன்று லட்சம் மதிப்பிலான அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டது.
நெல்லை மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக